கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசு இருக்கிறது; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசு இருக்கிறது; மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jun 2017 11:15 PM IST (Updated: 10 Jun 2017 10:28 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசு இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருக்கிறார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

குற்றவாளியின் பினாமி அரசு

கடுகளவும் தமிழக மக்களுக்குப் பலன்தராத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி திறப்புவிழாவில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சி பினாமி ஆட்சியல்ல என்றும், மெஜாரிட்டி பலம் கொண்ட நிரந்தரமான ஆட்சி என்றும் தெரிவித்திருப்பதுடன், தி.மு.க. தான் மைனாரிட்டி ஆட்சியை நடத்தியது என்றும் பேசியிருக்கிறார்.

குற்றவாளியின் பினாமி அரசாகத்தான் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். அந்த பினாமி தன்மையில் கூட நிரந்தரமாக இல்லாமல், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாறியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயன்று, 5 ஆண்டுகாலம் நிரந்தரமாக ஆட்சி செய்த தி.மு.க.வை நோக்கி மைனாரிட்டி அரசு என்று அவர் வசைபாடுகிறார்.

தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு என்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து வீழ்த்தி இருக்கலாமே? அ.தி.மு.க.வால் அதைச் செய்ய முடிந்ததா? மக்களின் பேராதரவு என்கிற உண்மையான மெஜாரிட்டியுடன் தமிழகத்தின் நலன்காக்கும் திட்டங்களை நிறைவேற்றியது தான் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற தி.மு.க. அரசு என்பதை முதல்–அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மாடுகள் விற்பனைக்கு தடை

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த மறைந்த ஜெயலலிதாவின் நிர்வாகத்தில் ஆரம்பித்த சீரழிவு, அடுத்து வந்த பினாமி முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியிலும், தற்போது ஆட்சி நடத்தும் பினாமி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும், மென்மேலும் வளர்ந்தபடியே இருக்கிறது.

இவர்களின் நிரந்தர ஆட்சியால், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குகோரும், தமிழக சட்டமன்றத்தின் ஒருமித்த தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. இங்கு மட்டுமா, ‘இந்திய பாராளுமன்றத்திலும் ஏறத்தாழ 50 எம்.பி.க்களை வைத்திருக்கிறோம்’, என்று பெருமை பேசும் இவர்களால், அதை பயன்படுத்தியாவது ‘நீட்’ தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் பெற முடிந்ததா?

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் சட்டத்தினை எதிர்த்து, பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் புதிய சட்டத்தை அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றி இருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். ஆனால் இங்கு மெஜாரிட்டி பலத்துடன் ஆள்கிறோம் என்று சொல்பவர்கள் அதுபோன்ற எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கிணற்றில் போட்ட கல்

மக்கள் விரோத பினாமி ஆட்சியை நிரந்தர ஆட்சி என பெருமை பேசும் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றும் திறனின்றி செயலிழந்து கிடக்கிறார்கள். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பேச்சில், இது பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று விமர்சிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய ஆட்சியாளர்களின் பினாமியாகவும், தமிழகத்தைப் பேரழிவுக்குள்ளாக்கும் சுனாமியாகவும், கடன்சுமையை அதிகரிப்பதில் ஜெயலலிதா ஆட்சியின் ஜெராக்ஸாகவுமே இந்த அரசு நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியைத்தான் நிரந்தர அரசு என்கிறார்கள்.

கிணற்றில் போட்ட கல் கூட அசைவின்றி, நிரந்தரமாக ஒரே இடத்தில்தான் கிடக்கும். அதுபோன்ற நிலையில்தான் இருக்கிறது இந்த பினாமி அரசு என்பதை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். விரைவில் அதனை ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கவும், பாடம் கற்பிக்கவும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story