போயஸ் தோட்ட இல்லத்திற்குள் சென்ற என்னை அடித்து வெளியே தள்ளினார்கள் ஜெ.தீபா கண்ணீர் பேட்டி


போயஸ் தோட்ட இல்லத்திற்குள் சென்ற என்னை அடித்து வெளியே தள்ளினார்கள் ஜெ.தீபா கண்ணீர் பேட்டி
x

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் சென்ற என்னை அடித்து வெளியே தள்ளினார்கள் என ஜெ.தீபா கண்ணீருடன் பேட்டியளித்து உள்ளார்.


சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் கார்டனைவிட்டு வெளியே வந்த ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார். மிகவும் பதற்றமாக காணப்பட்ட அவர் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விவரித்தார், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார். 

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் சென்ற என்னை சிலர் அடித்து வெளியே தள்ளினார்கள். நானும் என் பாதுகாவலரும் போயஸ் கார்டனில் இருந்து அடித்து வெளியே துரத்தப்பட்டோம். ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்த சகோதரர் தீபக் அழைத்ததால் தான் இங்கு வந்தேன். என்னை தாக்கியதால் மாதவனை இங்கு அழைத்தேன். தீபக் என்னை ஏமாற்றி திட்டமிட்டு அழைத்து பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளார். தினகரன் குடும்பத்தினருடன் சேர்ந்து தீபக் சூழ்ச்சி செய்து, என்னையும், எனது கணவரையும் கொல்லப்பார்கிறார்கள். என்னை கொல்ல சதி செய்யப்படுகிறது. 

எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன். எனக்கும், என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். அதிமுக தொண்டர்கள் என்னையும், கட்சியையும் காப்பாற்றுங்கள் என்றார். 

சசிகலா குடும்பத்துடன் சேர்ந்து பணத்திற்காக ஜெயலலிதாவை  தீபக் கொன்றுவிட்டார் எனவும் தீபா குற்றம் சாட்டிஉள்ளார். 

ஜெ.தீபா குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசிய தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, போயஸ் கார்டனில் ஆட்களே கிடையாது, எப்படி தீபாவை அடிப்பார்கள். தீபா இதுபோன்று செயல்படுவது ஜெயலலிதாவை அவமானபடுத்துவதாகும். போயஸ் கார்டனில் நடந்த சம்பவம் சீன் போடுவது போல் உள்ளது. தீபாவை போயஸ் கார்டனுக்கு வரவேண்டாம் என யாரும் சொல்லவில்லை. அவர் வந்துவிட்டு செல்லலாம் என்றார். 

Next Story