அ.தி.மு.க. ஆட்சியை அவர்களே கவிழ்த்து கொள்வார்கள்; மு.க.ஸ்டாலின் பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியை அவர்களே கவிழ்த்து கொள்வார்கள்; மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2017 4:15 AM IST (Updated: 11 Jun 2017 10:42 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை அவர்களே கவிழ்த்து கொள்ளும் சூழ்நிலைதான் உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:–

எம்.எல்.ஏ.க்களுக்கு கமி‌ஷன்

கேள்வி:– அரசு சார்பில் குடிமராமத்து பணிகளுக்கு மேலும் ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்:– ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் சரியான முறையில் செலவிடப்பட்டால் உண்மையிலேயே சந்தோ‌ஷம் தான். ஆனால், இதுவரை அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கமி‌ஷன் தரக்கூடிய நிலையிலே ஒதுக்கப்படுகிறதா? என்ற அந்த கேள்வி மக்களிடத்திலே எழும்பி இருக்கிறது.

அவர்களே கவிழ்க்கும் சூழ்நிலை

கேள்வி:– தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியை நீங்கள் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு வருகிறதே?

பதில்:– நான் அப்படியொரு முயற்சியில் துளியளவு கூட ஈடுபடவில்லை. அவர்களுடைய ஆட்சியை அவர்களே கவிழ்த்துக் கொள்ளும் சூழ்நிலை தான் இன்றைக்கு நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி:– எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், மதுரையில் அமைக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூறுகிறார்கள். அதுபற்றி?

பதில்:– எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டும் என்ற போட்டி மட்டுமல்ல. அவர்களுக்குள்ளே பல போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என பலவாறு பிரிந்திருக்கிறது.

மகாத்மா காந்தி

கேள்வி:– பா.ஜ.க.வினர் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து இருக்கிறார்களே?

பதில்:– பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு பூங்கொத்தாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது என்று மகாத்மா காந்தி தெளிவாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரை மிருக பலத்தை பெற்றிருக்கும் பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதமாக கருத்தை தெரிவித்திருக்கிறார் எனச் சொன்னால், அது உள்ளபடியே வேதனைக்குரியது. இதைத்தான் தொடர்ந்து தி.மு.க. மட்டுமல்லாமல் திராவிடர் கழகமும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. சார்பில் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பிளாஸ்டிக் அரிசி

கேள்வி:– பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறதே?

பதில்:– தமிழகத்தை பொறுத்த வரையில் பாலில் கலப்படம் என்றார்கள். அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? என்றால் இல்லை. இதற்கிடையில் அரிசியிலே, சர்க்கரையிலே, முட்டையிலே கலப்படம் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால், ஆட்சியில் இருப்பவர்கள் இதனை உடனடியாக தடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story