அண்ணன் மகள் என்ற உரிமையில் போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்ற தீபா திட்டம்; நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று சென்றது குறித்து, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை,
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போதும், அ.தி.மு.க. பொது செயலாளராக இருந்த போதும் தீபாவை போயஸ் கார்டனில் அனுமதிக்கவில்லை. அண்ணன் மகள் என்ற உரிமையில் அந்த வீட்டை கைப்பற்ற தீபா திட்டமிடுகிறார். தீபா குடியிருக்கும் வீடே ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது.
தீபா இப்படி ஒரு தீமை செய்வார் என்பதை முன்கூட்டியே அறிந்தேன். எனவே, அந்த இல்லத்தை நினைவு இல்லமாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாட்டை முதல்–அமைச்சர் செய்ய வேண்டும். தீபாவுக்கு போயஸ் கார்டனில் நுழைய எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதாவால் கண்டு கொள்ளப்படாத ஒருவர் தீபா. அவரது திருமணத்துக்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை.
ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லாதவர் தீபா. தீபா எதற்காக இப்போது போயஸ் கார்டன் செல்ல வேண்டும். கட்சியின் துணை பொது செயலாளர் என்ற வகையில் தினகரன் போயஸ் கார்டன் செல்லலாம். ஆனால் தீபா ஏன் செல்ல வேண்டும். வீட்டை கபளீகரம் செய்வது தீபாவின் திட்டம். அதற்கு அனுமதிக்க முடியாது. தீபா உள்ளே செல்ல அனுமதி மறுப்பது நியாயம்தான். இவ்வாறு அவர் கூறினார்.