பத்திரப்பதிவு குறித்த புதிய அறிவிப்பை நிறுத்தி வைத்து சந்தை மதிப்பு வழிகாட்டியை சீரமைக்க வேண்டும்


பத்திரப்பதிவு குறித்த புதிய அறிவிப்பை நிறுத்தி வைத்து சந்தை மதிப்பு வழிகாட்டியை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:15 PM IST (Updated: 12 Jun 2017 6:38 PM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு குறித்த புதிய அறிவிப்பை நிறுத்தி வைத்து சந்தை மதிப்பு வழிகாட்டியை சீரமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து அறிவிப்புகளுமே ஏமாற்று நாடகமாக இருக்கிறது என்பதற்கு சமீபத்தில், சந்தை மதிப்பு வழிகாட்டி 33 சதவீதம் குறைக்கப்படுகிறது, என்ற அறிவிப்பு உதாரணமாகும்.

ஒரு பாக்கெட்டில் பைசாவை போட்டுவிட்டு, இன்னொரு பாக்கெட்டில் உள்ள பைசாவை எடுத்துக் கொள்வது போல் 33 சதவீதம் குறைவு என்று அறிவித்துவிட்டு, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும், தானப்பத்திரத்தை பதிவுசெய்வதற்கு உள்ள வரியை 4 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்த பினாமி அ.தி.மு.க. அரசு.

ஏற்கனவே 2012–ல், அ.தி.மு.க. ஆட்சி சந்தை மதிப்பு வழிகாட்டியை வானளாவிய உயரத்திற்கு கொண்டு சென்றதால், பத்திரப்பதிவுகள் அடியோடு குறைந்து, கட்டிடத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். அவர்களுக்கான அமைப்புசாரா வாரியத்தையும் முடக்கி மேலும் அவர்களின் தலையில் சுமையை ஏற்றி, திக்குமுக்காட வைத்தது அ.தி.மு.க. அரசு.

அது மட்டுமல்ல, 2012–ல் சந்தை மதிப்பு வழிகாட்டியை உயர்த்திய பிறகு 2011–2012–ல் 35 லட்சமாக இருந்த பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை 2012–2013–ல் 26 லட்சமாக குறைந்தது. சந்தை மதிப்பு வழிகாட்டி உயர்வு என்ற ஒரே உத்தரவினால் 9 லட்சம் பத்திரப்பதிவுகள் குறைந்தது. அதன்பிறகு, இன்றுவரை பத்திரப்பதிவுகள் எண்ணிக்கையானது, ஒவ்வொரு வருடமும் 30 ஆயிரம், 80 ஆயிரம், 45 ஆயிரம் என்று குறைந்துகொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில்தான், இப்போது சந்தை மதிப்பு வழிகாட்டியை 33 சதவீதம் குறைத்து அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில் பரிமாற்றம், தானம், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கு எழுதிக் கொடுக்கும் செட்டில்மென்ட் போன்ற ஆவணப் பதிவுக் கட்டணமாக ஏற்கனவே இருந்த 1 சதவீதம் என்பதை 4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அரசின் அறிவிப்பிலேயே சந்தை மதிப்பு வழிகாட்டி குறைக்கப்பட்டதால் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட, இந்த 4 சதவீத வரி உயர்வு என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி வழிகாட்டி மதிப்பில் குறைத்ததை பதிவு கட்டண உயர்வில் அரசு பொதுமக்களிடமிருந்து பறித்து கொள்ளும்.

இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த 33 சதவீத குறைப்பு என்ற அறிவிப்பானது, கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கோ, கட்டிடத் தொழிலை நம்பியிருப்பவர்களுக்கோ, பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்கோ பயனளிக்கும் அறிவிப்பு அல்ல.

இதனால்தான் கட்டுமான நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களும், கட்டுமான தொழிலாளர்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர்களும், இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என்ற முழக்கத்தை அறிவிப்பு வெளியானதிலிருந்து முன்வைத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி, இதுவரை தானங்களுக்கும், பரிமாற்றங்களுக்கும், செட்டில்மென்டுகளுக்கும் இருந்த ஆவணப் பதிவுக்கட்டணத்தை உயர்த்தி, சிறு சிறு குடும்பங்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைகளையும் அதிகமாக ஆக்கியிருப்பது வேதனைக்குரியதாகும்.

ஆகவே சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டதும், 4 சதவீத பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதும் மக்களுக்கு பயனளிக்குமா என்பது குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு குழுவை அ.தி.மு.க. அரசு அமைத்து, சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துகளையும் பெற்று, ஒரு சீரான, நியாயமான சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதுவரை இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை நிறுத்தி வைத்து, பத்திரப்பதிவுகள் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களைப் பாதிக்கும் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்காமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் சந்தை மதிப்பு வழிகாட்டியை மாற்றியமைத்து சந்தை மதிப்பு வழிகாட்டியை சீரமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story