அரசு வக்கீல் பதவிகளில் இடஒதுக்கீடு கேட்டு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


அரசு வக்கீல் பதவிகளில் இடஒதுக்கீடு கேட்டு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Jun 2017 2:00 AM IST (Updated: 15 Jun 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

அரசு வக்கீல் பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், சிறுபான்மையினருக்கு உரிய இடஒதுக்கீடு கேட்டு திருமாவளவன் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சென்னை ஐகோர்ட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

புதிய விதிகள்

சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராகும் அரசு வக்கீல் பதவிகளில், இடஒதுக்கீடு அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரை நியமிப்பது இல்லை. அங்கு 132 அரசு வக்கீல் பதவிகள் உள்ளன. ஆனால், இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த 3 வக்கீல்கள் மட்டுமே உள்ளனர்.

இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பான விதிகளை உருவாக்கிய தமிழக அரசு கடந்த ஏப்ரல் 29–ந் தேதி அரசாணை வெளியிட்டது.

ரத்து செய்யவேண்டும்

ஆனால், அதிலும் வெளிப்படைத்தன்மையான விதிகள் இல்லை. அரசு வக்கீல்களை எப்படி தேர்வு செய்து, நியமிக்க வேண்டும் என்ற தெளிவான விதிகள் இல்லை. தேர்வு குழுவினர், வக்கீல்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று, தாங்கள் விரும்பும் வக்கீல்களை, அரசு வக்கீலாக நியமிக்கும் விதமாக உள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது. இதில், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

 எனவே, இந்த புதிய விதிகளை ரத்து செய்யவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கி புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பதில் அளிக்கவேண்டும்

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு சட்டத்துறை முதன்மைச் செயலாளர், எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை முதன்மைச் செயலாளர், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 7–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story