பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2017 2:30 AM IST (Updated: 15 Jun 2017 11:01 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனே தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தடுப்பணை

தமிழகத்திற்கு வரும் தண்ணீரை மனிதாபிமானம் இன்றி தடுக்கும் வகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அடுத்தடுத்து தடுப்பணைகளை கட்டி வருவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பாலாற்றின் குறுக்கே 22–க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படுவதும், அவற்றின் உயரம் அதிகரிக்கப்படுவதும் தமிழக விவசாயிகளுக்கு, ஆந்திர மாநில அரசு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.

தமிழகத்திற்கு கிடைக்கும் பாலாற்று நீரை முற்றிலும் தடுத்துநிறுத்தும் வகையில் ஆந்திர அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுவதும், அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதும் வேதனையளிக்கிறது. வேலூர் மாவட்டத்திற்குள் உள்ள கங்குந்தி பகுதியில் இரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இருந்த தரைப்பாலத்தை திடீரென்று 36 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்கும் மேம்பாலமாக ஆந்திர அரசு மாற்றி வருவது பேரதிர்ச்சியளிக்கிறது.

சந்திரபாபு நாயுடு தொகுதி

பாலாற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைகளின் உயரத்தை எல்லாம் அதிகரிக்க ஆந்திர மாநில அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துவருவதும் கவலையளிக்கிறது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்பதை ஆந்திர அரசு உணர மறுக்கிறது.

ஆந்திர முதல்–அமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற குப்பம் தொகுதியை செழிக்க வைக்கவேண்டும் என்பதற்காக, ஒரு மாநிலத்திற்கே பயன்பட வேண்டிய தண்ணீரை, தன்னுடைய ஒரு தொகுதிக்காக தடுப்பது படுபாதகமான செயல்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தன் தொகுதி விவசாயிகளின் நலனை காப்பாற்ற, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் ஆந்திர மாநில முதல்–அமைச்சரின் நடவடிக்கைகளை தமிழக முதல்–அமைச்சர் தடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது, பாலாற்று நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விவசாயிகளே தடுப்பணை கட்டும் இடத்திற்கு சென்று தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும், தமிழக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.

சென்ற முறை இதேமாதிரி பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டபோது, 19.7.2016 அன்று தி.மு.க. சார்பில், என் தலைமையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு வெளிட்டவுடன் 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த தமிழக அரசினால், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு தடை பெற முடியவில்லை. அந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும் இல்லை.

தண்ணீர் கிடைக்காது

தங்களுக்குள் நடக்கும் பதவி சண்டையில் மாநில விவசாயிகள் நலனை மறந்துவிட்ட அ.தி.மு.க. அரசு, ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியாவது தடுப்பணைகள் கட்டும் பணியை நிறுத்த முடியவில்லை. தடுப்பணைகள் கட்டும் நிலை இப்படியே தொடர்ந்தால், பாலாற்றின் மூலம் தமிழகத்திற்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்காது என்ற மிக ஆபத்தான கட்டம் வந்துவிட்டது.

இதுதவிர, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் நிலைப்பாட்டை பயன்படுத்திக்கொண்டு, மேகதாது உள்ளிட்ட 4 இடங்களில் தமிழகத்திற்கு வரும் காவிரி தண்ணீரை முற்றிலுமாக தடுக்கும் விதத்தில் அணைகளை கட்ட கர்நாடக மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதையும் முறைப்படி மத்திய அரசை அணுகியோ, உச்சநீதிமன்றத்தை அணுகியோ தமிழக அரசு தடுக்க முயலவில்லை.

தடுக்க நடவடிக்கை

பதவியை தக்க வைத்துக்கொள்ளவே தினமும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பதும், நிலையற்ற, செயலற்ற அரசு தமிழகத்தில் அமர்ந்திருப்பதும், அண்டை மாநிலங்களுக்கு வசதியாகிவிட்டது. இதனால் மாநில நல்லுறவுகளுக்கு மதிப்பளிக்க மறுத்து, தடுப்பணைகள்–அணைகள் மூலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை மனம்போன போக்கில் தடுத்து வருகின்றன.

தமிழக அரசு உடனடியாக மவுனம் கலைக்கவேண்டும். மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பாலாற்றில் ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் தடுப்பணைப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றத்தை உடனடியாக அணுகி தடை உத்தரவை பெறவேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

நதிநீர் பாதுகாப்பு கமிட்டி

அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடுக்க மேற்கொள்ளும் அநியாயமான நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தமிழக அரசு நதிநீர் பாதுகாப்பு கமிட்டியை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story