மெரினா கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் காரை பின் தொடர்ந்த 3 மாணவர்கள் கைது


மெரினா கடற்கரை சாலையில் முதல்-அமைச்சர் காரை பின் தொடர்ந்த 3 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 18 Jun 2017 5:30 AM IST (Updated: 18 Jun 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரை சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை பின் தொடர்ந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பினார்.

போலீசார் பாதுகாப்பு வாகனங்கள் படைசூழ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மெரினா கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் அதிவேகமாக வந்தனர். போலீசார் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு எச்சரித்தும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்தநிலையில் கண்ணகி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.  பின்னர் அவர்களை அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 3 பேரும் தாம்பரம் சேலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்த ஜோமி வர்கீஸ்(வயது 19), கிழக்கு தாம்பரம் மணிமேகலை தெருவை சேர்ந்த அருண்(22), பள்ளிக்கரணை தேரடி தெருவை சேர்ந்த கீர்த்திவாசன்(20) என்பதும், தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிப்பதும் தெரிய வந்தது.

முதல்-அமைச்சர் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே அத்துமீறி நுழைதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறையை மீறி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தல் போன்றவற்றின் அடிப்படையில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story