16-வது நாளாக இடிக்கும் பணி: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது


16-வது நாளாக இடிக்கும் பணி: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது
x
தினத்தந்தி 18 Jun 2017 4:15 AM IST (Updated: 18 Jun 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை 16-வது நாளாக இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ மறுநாள் மாலை வரை எரிந்து கொண்டே இருந்தது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு ஒரு வழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு உகந்தது அல்ல என்றும், அதை இடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. அதன்படி, பணி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் கடந்த 2-ந்தேதி காலை முதல் ஜா கட்டர் எந்திரங்களின் உதவியுடன் இடிக்கும் பணியை தொடங்கினார்கள். கட்டிடத்தின் அருகில் கடைகள், நிறுவனங்கள், குடியிருப்புகள் இருந்ததால் கட்டிடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இடித்தனர்.

கடந்த 10-ந்தேதி கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் ஜா கட்டர் எந்திரத்தின் டிரைவர் சரத்குமார் பலியானார்.

நேற்று காலை அதற்கான முதல் கட்ட பணி தொடங்கியது. கட்டிடத்தின் இடது பக்க பகுதியில் இருந்த 8 தூண்கள் ஜா கட்டர் எந்திரத்தின் உதவியுடன் இடிக்கப்பட்டது.  அப்போது முகப்பு கட்டிடத்தின் இடது பகுதி அப்படியே சரிந்து விழுந்தது.

கட்டிடத்தின் மீதமுள்ள பகுதி இன்று பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு முழுக்கட்டிடமும் தரைமட்டமாக்கப்பட உள்ளதாக இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story