மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெயரைக் கூறி பணம் பறித்தவர் கைது


மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெயரைக் கூறி பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2017 1:43 AM IST (Updated: 18 Jun 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெயரைக் கூறி பணம் பறித்த சென்னையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரிடம், ‘மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் பேசுகிறேன்’ என்று செல்போன் மூலம் ஒருவர் தொடர்புகொண்டார். அப்போது அவர், ‘கட்சி நிதிக்காகவும், மார்த்தாண்டத்திற்கு மத்திய மந்திரி வரும்போது பிளக்ஸ் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கவும், நீங்கள் நன்கொடையாக ரூ.3 லட்சம் தரவேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

போனில் பேசியவர் மீது டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டாக்டர், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் உறவினர் ஆவார். இதனால் அவர் உடனடியாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

அப்போது அவர், “கட்சியின் பெயரையோ எனது பெயரையோ பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்குமாறு ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். எனவே உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த டாக்டர், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து, டாக்டரை தொடர்பு கொண்டவரின் செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த முகமது மீரான் (வயது 45) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது மீரானை கைது செய்தனர். 

Next Story