நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமேஷ்வரம்,
கடந்த 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தடைக் காலம் முடிந்து கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதற்கிடையே இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் கைது செய்வோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கடற்படையினர் எச்சரித்தனர்.அவர்களது எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக்ஜலசந்தி பகுதிக்கு செல்வதை தவிர்த்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இருப்பினும் சிலர் வழக்கம்போல் நெடுந்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் வலையை விரித்து மீனுக்காக காத்திருந்தனர்.அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள், “இது எங்கள் எல்லை பகுதி. இங்கு மீன்பிடிக்ககூடாது” என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.
அப்போது ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் யார் என்ற விவரம் தெரிய வில்லை.
Related Tags :
Next Story