ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்: தம்பிதுரை
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் என்று கூறி அண்மையில் வீடியோ ஒன்றை ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த சூழலில் மாலை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான வீடியோ ஆதாரத்தை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
இதன் காரணமாக தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் வித்யாகர் ராவை மக்களவை சபாநாயகரும் அதிமுக அம்மா அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறியதாவது:-
ஆளுநர் வித்யாசாகர் ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது குதிரை பேரம் நடக்கவில்லை. குதிரை பேரம் நடந்ததாக ஸ்டாலின் கூறுவது தவறு.எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை.தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆட்சியை கலைத்தால், தான் முதலமைச்சராகலாம் என ஸ்டாலின் கனவு காணுகிறார்;
அவர் கனவு பலிக்காது. எடப்பாடி தலைமையிலான ஆட்சி மீதமுள்ள 4 ஆண்டுகள் தொடரும். வீடியோ விவகாரத்தை சரவணன் எம்.எல்.ஏ மறுத்துள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story