தமிழகத்தில் தியேட்டர்கள் 3-ந்தேதி முதல் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்


தமிழகத்தில் தியேட்டர்கள் 3-ந்தேதி முதல் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்
x
தினத்தந்தி 1 July 2017 4:45 AM IST (Updated: 1 July 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 3-ந்தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

சென்னை,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால் சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு நேற்று புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து ஆலோசிக்க திரையுலகினரின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் செல்வின்ராஜ், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஏராளமான திரையரங்கு உரிமையாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் அபிராமி ராமநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியால் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. ரூ.50 கட்டணத்துக்கு குறைவாகவும் அதிகமாகவும் உள்ள டிக்கெட்டுகளுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி வரி என்று புரியாத குழப்ப நிலையும் உள்ளது. இதனால் இணையதள டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சினிமா டிக்கெட்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. அதோடு தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் கேளிக்கை வரியையும் சேர்த்தால் 58 சதவீதம் வரி செலுத்த வேண்டி உள்ளது.

இந்த வரி சுமையை தியேட்டர் அதிபர்களால் தாங்க முடியாது. டிக்கெட்டுக்கு ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்தி விட்டு மீதி பணத்தைத்தான் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டி உள்ளது. கூடுதல் வரி சுமையை மக்கள் மீது திணித்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது.

பெரிய படங்களே 20, 25 நாட்கள்தான் ஓடுகின்றன. சிறிய படங்கள் 5 நாட்கள் கூட ஓடுவது இல்லை. இந்த நிலையில் அரசின் கேளிக்கை வரிக்கான புதிய சட்டம் சினிமா தொழிலை நம்பி இருக்கும் 10 லட்சம் குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வற்புறுத்தி நாளை மறுநாள்(3-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடுவது என்று முடிவு எடுத்து உள்ளோம். அரசு இந்த வரியை ரத்து செய்யும் என்று நம்புகிறோம். கேரளாவில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story