கடற்கரை கிராமங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க மீனவர்களுக்கு பணம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு


கடற்கரை கிராமங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க மீனவர்களுக்கு பணம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jun 2017 9:45 PM GMT (Updated: 30 Jun 2017 8:38 PM GMT)

கடற்கரை கிராமங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க மீனவர்களுக்கு பணம் தரப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஆர்.டி.ஓ. வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல். தொழிற்சாலைக்கு கடற்கரை கிராமங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு சில மீனவ கிராம மக்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த வாரம் சதானந்தபுரம் அருகே நடைபெற இருந்த எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய மீனவ கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆர்.டி.ஓ. அரவிந்தன், சி.பி.சி.எல். அதிகாரிகள் சார்பில் எண்ணெய் குழாய் பதிப்பது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படும். அதுவரை குழாய் பதிக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றார்.

அதன்படி திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சி.பி.சி.எல். அதிகாரிகள் சார்பில், எண்ணெய் குழாய் பதிக்கப்படுவது குறித்த கருத்து கேட்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மீனவ கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சி.பி.சி.எல். அதிகாரிகள், ஆர்.டி.ஓ. அரவிந்தன், தாசில்தார் செந்தில்நாதன், சி.பி.சி.எல். திட்ட மேலாளர் தங்கராஜ், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு எண்ணெய் குழாய் பதிப்பது தொடர்பாக படம் மூலம் விளக்கம் அளித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீனவ கிராம பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை திருமண மண்டபத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் திருமண மண்டபத்தின் வெளிப்புற கேட்டையும் மூடினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு கொடுக்க போவதாக கூறி அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணன், மீனவர் அமைப்பு நிர்வாகிகள் கோசு மணி, த.மா.கா. மாநில செயலாளர் சுகுமார் மற்றும் பெண்கள் உள்பட 500 பேர் கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர். அனைவரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதற்கிடையில் கருத்து கேட்பு கூட்டத்தில் தாங்கல் தியாகராயபுரம் தி.மு.க. 14-வது வட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும்போது, “மீனவ மக்களுக்கு எல்லாம் செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய ஆர்.டி.ஓ. அரவிந்தன், “உங்கள் கிராமம் வழியாக எண்ணெய் குழாய் செல்லவில்லை” என்றார்.

அதற்கு கார்த்திகேயன், “நாங்களும் கடற்கரை ஓரமாகத்தான் வசிக்கிறோம். சி.பி.சி.எல். அதிகாரிகள் ஒருதலை பட்சமாக மீனவ கிராம மக்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் வழங்கி உள்ளனர். அதை என்னால் நிரூபிக்க முடியும். நலத்திட்ட உதவிகள் செய்து தருவதாக கூறுவதை நம்ப முடியாது. மீனவர்களும், நாங்களும் சகோதரர்கள் போல் வாழ்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள். அவர்களுக்கு வழங்கியதை போல் எங்களுக்கும் பணம் வழங்க வேண்டும்” என அதிரடியாக குற்றம் சாட்டினார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆர்.டி.ஓ. அரவிந்தன், சி.பி.சி.எல். அதிகாரிகளை பார்த்து “இந்த குற்றச்சாட்டு உண்மையா?” என்றார். ஆனால் அதற்கு பதில் அளிக்க முடியாமல் சி.பி.சி.எல். அதிகாரிகள் தலை குனிந்து கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.டி.ஓ. அரவிந்தன், “நான் குழாய் பதிப்பதால் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு ஏதாவது நலத்திட்ட உதவிகள் பெற்று தரவே கூட்டத்துக்கு வந்தேன். உங்களுக்கு பணம் வாங்கி தர வரவில்லை. அது என் வேலை இல்லை. வேண்டுமானால் ஒவ்வொரு கிராம மக்களும் சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு தனித்தனியாகசென்று உங்களுக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு வேகமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கூச்சலிட்டனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ஆர்.டி.ஓ. அரவிந்தன் காரில் ஏறி சென்று விட்டார். இதற்கிடையில் போலீசாரால் கைதாகி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களும், அங்கிருந்து வெளியேறி வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கூட்டத்தில் அமைதியாக பங்கேற்றனர்.

கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு ஆர்.டி.ஓ. கோபமாக சென்று விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story