சென்னையில்தான் சரக்கு, சேவை வரி முதல் பரிவர்த்தனை கலால் துறை முதன்மை ஆணையர் தகவல்


சென்னையில்தான் சரக்கு, சேவை வரி முதல் பரிவர்த்தனை கலால் துறை முதன்மை ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2017 5:15 AM IST (Updated: 2 July 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே சென்னையில் தான் முதல் சரக்கு, சேவை வரி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக மத்திய கலால் துறை முதன்மை ஆணையர் தெரிவித்தார்.

சென்னை

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளான நேற்று சரக்கு, சேவை வரி நாளாக அனைத்து நேரடி வரி வசூல் செய்யும் அலுவலகங்களிலும் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கம், மகாத்மா காந்தி சாலையில் உள்ள சரக்கு, சேவை வரி வளாகத்தில் சரக்கு, சேவை வரி நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, ‘கேக்’ வெட்டி சரக்கு, சேவை வரி நாளை கொண்டாடினார்.

இதில் மத்திய கலால் துறை மற்றும் சரக்கு, சேவை வரி முதன்மை தலைமை ஆணையர் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) சி.பி.ராவ், சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் பி.கே.தாஸ், தீர்வு கமிஷன்(சென்னை) துணை தலைவர் சி.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து முதன்மை தலைமை ஆணையர்கள் சி.பி.ராவ், பி.கே.தாஸ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சரக்கு, சேவை வரி குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் அதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். சரக்கு,சேவை வரி என்பது மிகவும் எளிதானது. சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக சரக்கு, சேவை வரி குறித்து பல்வேறு விதமான கருத்துகள் வெளிவருகின்றன.

அதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். கடலை மிட்டாய்க்கு 18 சதவீதமும், பீட்சாவுக்கு 5 சதவீதமும் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வந்தது. அது உண்மைக்கு புறம்பானது. கடலைமிட்டாய்க்கு அப்படி வரி எதுவும் விதிக்கப்படவில்லை. ரூ.20 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் மட்டுமே அதற்கு சரக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது.

சரக்கு, சேவை வரி நடைமுறைக்கு வந்ததும், சுங்கத்துறையின் இறக்குமதி பிரிவில் இந்தியாவிலேயே சென்னையில்தான் முதல் சரக்கு, சேவை வரி பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜெர்மன் நிறுவனமான ‘போஸ்க்’ இறக்குமதிக்கான சரக்கு, சேவை வரி பரிவர்த்தனை செய்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக சரக்கு, சேவை வரி விதிப்பால் வரிவருவாய் 14 சதவீதம் கூடுதலாக வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story