தியேட்டர்களை மூடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் அபிராமி ராமநாதன் பேட்டி


தியேட்டர்களை மூடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் அபிராமி ராமநாதன் பேட்டி
x
தினத்தந்தி 1 July 2017 10:30 PM GMT (Updated: 1 July 2017 7:22 PM GMT)

தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை,

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வந்ததால், சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

இதுபற்றி ஆலோசிக்க திரையுலகை சேர்ந்தவர்களின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கூட்டம் முடிந்த பின், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, “தமிழக அரசின் கேளிக்கை வரிக்கான புதிய சட்டம், சினிமா தொழிலை நம்பியிருக்கும் 10 லட்சம் குடும்பங்களை பாதிக்கும். எனவே 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திங்கட் கிழமை (நாளை) முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா தியேட்டர்களையும் மூடுவது என்று முடிவு எடுத்து இருக்கிறோம்” என்றார்.

இது, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் அபிராமி ராமநாதன் நேற்று காலை சந்தித்து பேசினார். முதல்-அமைச்சரை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“சரக்கு, சேவை வரியால் பொழுதுபோக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏறக்குறைய டிக்கெட் கட்டணத்தில் 53 சதவீதம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் சார்ந்துள்ள இந்த சினிமா தொழிலில் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எந்த விதமான உள்வரி விதிப்பு இல்லை.

ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை தற்போது நிறுத்தி வைத்து இருக்கிறோம். இந்த அசாதாரண சூழலில், ‘ஆன்-லைன்’ முன்பதிவு என்பது சாத்தியமில்லாதது. கேளிக்கை வரி விதிப்பால் தனி திரையரங்குகள் கடுமையாக பாதிக்கப்படும்.

மற்ற மொழிப்படங்களுக்கு வரி விதித்து தமிழ் படங்களுக்கு மட்டும் இந்த வரி விதிப்பை தளர்த்தி இருக்கலாம். அதே வேளையில் அதிகபட்ச வரிவிதிப்பை ஹாலிவுட் உள்பட வெளிநாட்டு படங்களுக்கு சாத்தியப்படுத்தி இருக்கலாம்.

முதல்-அமைச்சரை சந்திப்பதற்கு முன்பு அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினோம். “முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் எங்கள் கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு அறிந்தார்கள். எனவே இந்த பிரச்சினையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.

தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அடங்கிய கூட்டு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதில், எங்களின் முடிவை அறிவிப்போம்.”

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Next Story