சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறை திட்டம் தமிழக அரசு அறிவிப்பு


சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணைய முறை திட்டம் தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2017 4:30 AM IST (Updated: 2 July 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு விவசாயிகள் அனைவரும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பெற வசதியாக கூட்டுப் பண்ணைய முறை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக, அவர்களை ஒருங்கிணைத்து, கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவித்து, கடன் வசதி, சிறந்த தொழில் நுட்பமுறைகளை அறிமுகப்படுத்தி, அதைத் தொடர்ந்து பின்பற்றி, நிலைப்படுத்தி, முன் மற்றும் பின் சந்தை இணைப்பை மேற்கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்று, 2017-18-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், 16.3.17 அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 81.18 லட்சம் விவசாயிகளில், சுமார் 92 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இவர்கள் குறைந்த பரப்பளவில் சாகுபடி பணியை மேற்கொண்டு வருவதால், தங்களுக்குத் தேவையான கடன் வசதியைப் பெற்று, புதிய தொழில் நுட்பங்களைத் தங்களது நிலங்களில் முழுமையாகச் செயல்படுத்த இயலாமல் உள்ளனர்.

மேலும் தங்களின் விளைபொருட்களின் அளவு குறைவாக உள்ளதாலும், மதிப்பை கூட்டி அதிகம் லாபம் பெறும் வகையில் சந்தைப்படுத்தவும் இயலாத நிலை உள்ளது. இதனால் இவர்களுக்குப் போதிய வருமானமும் கிடைப்பதில்லை.

எனவே, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2017-18-ம் ஆண்டில், 2 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் முன்னோடித் திட்டமாக, கூட்டுப் பண்ணைய முறை, கொள்கை அளவில் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தற்போது முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று, இத்திட்டத்தைச் செயல்படுத்த நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பண்ணைய முறையில், ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலமுள்ள 20 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, விவசாய ஆர்வலர் குழுக்கள், சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு அரசினால் ஏற்படுத்தப்படும் இக்குழுக்களின் மூலம் கூட்டுப்பண்ணைய முறையில் செயலாற்றி பயனடைவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் பங்கேற்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டும்.

அதுபோல் அருகில் உள்ள 5 விவசாய ஆர்வலர் குழுக்களை இணைத்து, குறைந்தபட்சம் 100 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படும். நடப்பாண்டில் இதுபோன்று 2 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் வேளாண்மை தொடர்பான பொதுத் தேவைகளை பூர்த்தி செய்ய, ரூ.5 லட்சம் மூலதன நிதியாக தவணை முறையில் வழங்கப்படும். இம்மூலதன நிதியைக் கொண்டு, இக்குழுவில் உள்ள சிறு, குறு விவசாய உறுப்பினர்கள் தங்களின் தேவைக்கேற்றவாறு, நுண்ணீர்ப் பாசன அமைப்பு, நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள், பொதுப் பயன்பாட்டுக்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பணிகளுக்காக செலவிடலாம்.

இக்குழுக்கள் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனையுடன், சரியான பயிரைத் தேர்வு செய்து, சாகுபடிக்கு தேவையான உழவு, விதை, உரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களையும், தொழில் நுட்பங்களையும் ஒருங்கிணைந்து பெற்று, சாகுபடி செய்து, உயர்விளைச்சல் பெறவும், விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, நல்ல விலைக்கு சந்தைப்படுத்துவதற்கும் வசதியாக அமையும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அருகருகே உள்ள தரம் உயர்ந்த 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக மேம்படுத்தப்படும்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் சிறு விவசாயிகள் வேளாண் வணிகக் கூட்டமைப்பு ஆகியவை மூலம் நிதி உதவி மற்றும் கடன் வசதிகளைப் பெற தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

2017-18-ம் ஆண்டில், இத்திட்டத்திற்காக ரூ.100 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கும். இதன் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் அதிகளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, வரும் 5 ஆண்டுகளில் 40 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுப் பண்ணையத் திட்டம் எனும் புதுமையான திட்டத்தினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story