முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 2 July 2017 11:12 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான எழுத்து தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்தனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், நுண்உயிரியல், மனைஅறிவியல், தெலுங்கு, உடற்பயிற்சி இயக்குனர்கள் (கிரேடு-1) ஆகிய 17 பாடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

தேர்வு எழுத வந்தவர்கள் கைக்கெடிகாரம் கட்டிச்செல்ல அனுமதிக்கவில்லை. செல்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. பைகள் வைக்க தனியாக அறை ஒதுக்கப்பட்டது. தேர்வு நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது.

சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாடியில் தேர்வு எழுதிவிட்டு கீழே வந்தனர். அவர்கள் வெளியே செல்லாத வகையில் கேட்டை இழுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பூட்டினர்.

தங்களை அடைத்து வைத்ததால் இது குறித்து தேர்வு எழுதியவர்கள் போலீசாரிடம் கேட்டபோது, “ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு வந்தவர் அவர் பையையும், அடுத்தவர் பையையும் எடுத்து சென்றுவிட்டார். அதில் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. எனவே அவரவர் பையை அவரவர் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்கிறோம்” என்றனர். பின்னர் தேர்வு எழுதியவர்களின் பொருட்களை சரிபார்த்து அவர்களை போலீசார் வெளியே அனுப்பினர்.

தேர்வு எப்படி இருந்தது? என்று சிலரிடம் கேட்டபோது, தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மதிப்பெண் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மொத்தம் 3 ஆயிரத்து 375 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களுக்கு ஏற்ப அவர்களை தேர்வு செய்ய வேண்டி இருப்பதால், பலரை வடிகட்ட வினாக்கள் கடினமாக தேர்வு செய்யப்பட்டன’ என்றனர்.

தமிழகம் முழுவதும் 601 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வை 2 லட்சத்து 310 பேர் எழுதினர். இது 91.69 சதவீதம். 18 ஆயிரத்து 181 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

Next Story