நீரா பானம் குறித்து சட்டசபையில் ருசிகர விவாதம்; உறுப்பினர்களுக்கும் குடிக்க வழங்கப்பட்டது
நீரா பானம் குறித்து சட்டசபையில் ருசிகர விவாதம் நடந்தது. மேலும், உறுப்பினர்கள் அனைவரும் குடிக்க நீரா பானம் வழங்கப்பட்டது.
சென்னை,
தமிழக சட்டசபை வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கேண்டீனில் நேற்று தென்னையில் இருந்து இறக்கப்பட்ட நீரா பானம் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது. இந்த பானம், கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக ஐஸ் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது.இதுகுறித்த தகவலை சபாநாயகர் ப.தனபால், சட்டசபையில் உறுப்பினர்கள் மத்தியில் அறிவித்தார். ‘‘உறுப்பினர்கள் அருந்துவதற்காக நீரா பானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் சென்று அருந்தலாம்’’ என்றார். சற்று நேரத்தில் சபாநாயகர் ப.தனபால் சாப்பிட சென்றதும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை நடத்தினார். அவரும், ‘‘நீரா பானம் உள்ளது. உறுப்பினர்கள் சென்று அருந்துங்கள்’’ என்றார்.
அப்போது, எழுந்து பேசிய தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம் தொகுதி), ‘‘சபாநாயகரும் இதைத்தான் சொன்னார். துணை சபாநாயகரும் இதைத்தான் சொல்கிறார். இதைவைத்து பார்க்கும்போது 2 பேரும் நீரா பானத்திற்கான பி.ஆர்.ஓ.க்களா? என்றார். உறுப்பினரின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘‘தென்னை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.
அதன்பின்னர் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல் தொகுதி), ‘‘நீரா பானம் நன்றாகத்தான் இருக்கிறது. பனையில் இருந்து இறக்கப்படும் பதநீரையும் இதேபோல் பதப்படுத்தி விற்பனை செய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார். அமைச்சர் பி.தங்கமணி, ‘‘மாவட்ட கலெக்டர் அனுமதியை பெற்று பதநீர் இறக்கிக்கொள்ளலாம். ஏற்கனவே, அதற்கு அனுமதி இருக்கிறது’’ என்றார்.