முதலை தாக்கி உயிர் இழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் சரகம்–15 விநாயகர் தெரு கிராமத்தை சேர்ந்த சின்னையனின் மகன் செல்லத்துரை 3.7.2017 அன்று அணைக்கரை பாலம் கொள்ளிடம் ஆறு தென்கரையில், நீர்த்தேக்க பகுதிக்கு சென்றபோது, நீர்த்தேக்க பகுதியில் உள்ள முதலை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்லத்துரை குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குளப்புறம் கிராமத்தை சேர்ந்த ராஜனின் மனைவி சஜிதா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 15.3.2017 அன்று தாயும், சேயும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணை அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வந்த, நாரணப்பட்டி கிணத்தூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜனின் மகன் அரவிந்தன் 24.6.2017 அன்று கச்சிராப்பாளையம், கோமுதி ஆற்றின் கால்வாயில் குளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
சஜிதா குடும்பத்தின் வறிய நிலையை கருத்திற்கொண்டு சிறப்பினமாக கருதி முதல்–அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும்; அரவிந்தன் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.