17–ந் தேதி ஜனாதிபதி தேர்தல்; தமிழக சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட ஏற்பாடு
17–ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டசபை வளாகத்தில் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–நாட்டின் 15–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17–ந்தேதியன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற பேரவை செயலக வளாகத்தில் அமைந்துள்ள ‘குழு கூட்ட அறை’யில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
சட்டமன்ற பேரவை செயலாளர் (பொறுப்பு) க.பூபதி, சட்டமன்ற பேரவை செயலக இணைச்செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற பேரவை செயலக வளாகத்தில் உள்ள ‘குழு கூட்ட அறை’யில் வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தனது இசைவினை அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், பாராளுமன்றத்திலோ அல்லது வேறு மாநில தலைமையிடத்தில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடியிலோ வாக்களிக்க விரும்புபவர்கள், உரிய படிவத்தில் (படிவம் ‘ஏ’ அல்லது ‘பி’) முறையாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் வருகிற 6–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.அதற்கான விண்ணப்பம் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் (பொறுப்பு) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். புதுடெல்லி அல்லது வேறு மாநில தலைநகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பின்னர், அதனை மாற்ற இயலாது என்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது.
வாக்காளர்கள், வாக்களிக்கும்போது தங்கள் அடையாள அட்டையை உதவி தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வாக்களிக்க ஏதுவாக உதவி தேர்தல் அதிகாரி ஏற்பு அளிக்கும் வகையில் தான் வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.