வங்கிகளில் ரூ.17 ஆயிரம் கோடி கடன் மோசடி
வங்கிகளில் கடன் மோசடி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையை சேர்ந்தவர் சீனிவாசன். வங்கி முன்னாள் ஊழியரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரபடி இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மொத்தம் 483 வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் ஒரு வழக்கில் கூட முறையான புலன் விசாரணை நடைபெறவில்லை. இதனால் மோசடிக்கு துணையாக இருந்த வங்கி அதிகாரிகள் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றனர்.
மத்திய அரசுக்கு உத்தரவுகடன் மோசடி தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். இதற்காக, வங்கி மோசடிகள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள அனைத்து வங்கிகளிலும் தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வங்கி மோசடி தொடர்பாக விசாரிக்க தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கொடுத்த மனுவை மத்திய அரசு சட்டப்படி பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.