4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை
வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முழுவதும், சென்னை மாவட்டம் நீங்கலாக 31 மாவட்டங்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 15.37 லட்சம் விவசாயிகள் சாகுபடி செய்த 31.85 லட்சம் ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டது. இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டு கழகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு பொது காப்பீட்டு கழகம் ஆகிய 3 காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காப்பீட்டு கட்டணத்தில் தமிழக அரசின் பங்காக ரூ.440.18 கோடி மானியமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்குவதற்காக, கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனைகள் வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறைகளால் விரைந்து நடத்தப்பட்டு, காப்பீட்டு நிறுவனங்களுக்கு மகசூல் விவரங்களை குறித்த காலத்தில் வழங்க அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது.
இதன்மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த ஏப்ரல் 24–ந் தேதி இழப்பீட்டு தொகை வழங்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. ஜூன் 21–ந் தேதி வரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு ரூ.1,066.12 கோடி இழப்பீட்டு தொகை ஒப்பளிக்கப்பட்டது.25 மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து பாதிப்படைந்த 4 லட்சத்து 10 ஆயிரத்து 491 விவசாயிகளுக்கு, கடந்த 3–ந் தேதி வரை மொத்தம் ரூ.1,282.05 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு பொது காப்பீட்டு கழகம் ரூ.120.33 கோடியை சேலம், திருப்பூர், கடலூர், காஞ்சீபுரம், சிவகங்கை, நெல்லை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்படைந்த 48,921 விவசாயிகளுக்கும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொது காப்பீட்டு கழகம் மூலமாக ரூ.258.54 கோடியை தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.மீதமுள்ள ரூ.903.18 கோடி இந்திய வேளாண் காப்பீட்டு கழகத்தால் அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 50 ஆயிரத்து 692 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
நெற்பயிருக்கான மீதமுள்ள இழப்பீட்டு தொகையையும், இதர பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையையும் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கிட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி வேளாண்மைத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.