நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில், கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்


நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில், கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 July 2017 10:15 PM IST (Updated: 5 July 2017 8:11 PM IST)
t-max-icont-min-icon

நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில், கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னை,

கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு வழங்கப்படாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் த.பாண்டியன், பொருளாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தி.மு.க. விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றார். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கே.வி.ராஜ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 4 பருவங்களில் கொள்முதல் செய்த கரும்புக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கவில்லை. அந்த நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி இந்த போராட்டம் நடத்துகிறோம்.

இதை வழங்காமல் அரசு இழுத்தடிக்கும் பட்சத்தில் வருகிற 25–ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். எனவே எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்று, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்’’, என்றார்.


Next Story