ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.19 கோடியில் கட்டப்பட்ட புதிய விருந்தினர் மாளிகை
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நவீன வசதிகளுடன் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விருந்தினர் மாளிகை திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
சென்னை,
சென்னை மாநகரின் இதயப்பகுதியான அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இதில் அரசு பன்னோக்கு உயர் மருத்துவமனை, புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கலைவாணர் கலையரங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.இதுதவிர 60 ஆயிரம் சதுர அடியில் ரூ.19 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 36 அறைகள் கொண்ட அரசு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டுள்ளது. இதில் தரைதளத்தில் 16 அறைகளும், முதல் தளத்தில் 16 அறைகளும், 2–வது மாடியில் நவீன வசதிகளுடன் கூடிய 4 ‘சூட்’ அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு அறைகளிலும் கழிவறைகள் மற்றும் பால்கனிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர முதல் தளத்தில் 4 கூட்ட அரங்குகளும், தரை தளத்தில் 2 கூட்ட அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் உலக தரத்தில் கட்டமைக்கப்பட்டு உள்ளன.
பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையின் கட்டுமானப்பணிகள் முழுவதையும் நிறைவு செய்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இதையடுத்து முக்கிய விருந்தினர்களின் பயன்பாட்டிற்காக அரசு விருந்தினர் மாளிகை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அரசு விருந்தினர் மாளிகை திறக்கப்படவில்லை.
மாதங்கள் பல கடந்தும் புதிய விருந்தினர் மாளிகை திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.