திரையரங்குகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது: சினிமாதுறைக்கு இரட்டை வரி விதிக்கப்படவில்லை
சினிமாதுறைக்கு இரட்டை வரி விதிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே உள்ள நடைமுறை தான் தொடருகிறது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் பதில் அளித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தகவல் கோரல் அடிப்படையில் பேசியதாவது:–
சினிமா தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்களின் நலன் கருதி, 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.
நான் இந்த அரசை கேட்டுக் கொள்ள விரும்புவது, கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்துள்ள நிலையில் அப்படியொரு கொள்கை முடிவை தமிழகத்திலும் எடுத்து சினிமா தொழிலை பாதுகாக்கும் சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:–
1939–ம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரியதாகும். இதுவரை இந்த வரியை மாநில அரசு வசூலித்து நிர்வாக செலவு போக மீதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி வந்துள்ளதால் மாநில அரசு கேளிக்கை வரியை வசூலித்தால் ஜி.எஸ்.டி. வரிக்குள் உட்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இது உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரி வருவாய் என்பதால் ஏற்கனவே இருந்த தமிழ்நாடு கேளிக்கை வரியை ரத்து செய்து விட்டு உள்ளாட்சி அமைப்புகளே இந்த வரியை வசூலிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 1–ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.
ஏற்கனவே கிராமப்புறங்களில் 20 சதவீத கேளிக்கை வரியும், நகர்புறங்களில் 30 சதவீத கேளிக்கை வரியும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டது. எனவே கேளிக்கை வரி புது வரி அல்ல. ஏற்கனவே இது அரசால் வசூலிக்கப்பட்ட வரிதான். இப்போது உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக வசூலிக்கிறது. ஜி.எஸ்.டி. வரியில் 100 ரூபாய்க்கு குறைவான நுழைவு கட்டணம் இருக்குமானால் 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு மேல் இருந்தால் 28 சதவீதமும் வரி வசூலிக்க வழி உள்ளது. ஏற்கனவே திரைப்பட துறையை பொறுத்தவரை பல இனங்களுக்கு மத்திய அரசு வசூலித்த சேவை வரி பல வகைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேளிக்கை வரியை வசூலிக்கும் அதிகாரம் கொடுத்துள்ளோம். ஆகவே கேளிக்கை வரியையும், ஜி.எஸ்.டி. வரியையும் இரட்டை வரியாக கருத முடியாது. 18 சதவீதம் அல்லது 28 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி.யில் வசூலிக்கப்பட வேண்டும். இதனால் திரையரங்குக்கு பாதிப்பு இருக்காது. தமிழக அரசால் திரைப்படங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விலக்கு தொடருமா? என்பது பற்றி கடந்த 3–ந்தேதி திரைப்பட துறையினர் முதல்–அமைச்சரை சந்தித்து பேசினார்கள்.அப்போது சினிமா கட்டணத்தை உயர்த்துவது பற்றியும் பேசப்பட்டது. கேளிக்கை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களிடம் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய நிதி ஆதாரம் என்று முதல்–அமைச்சர் தெளிவுபடுத்தினார். இன்று (நேற்று) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரையுலகினர் வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் திரைப்பட துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து கண்டிப்பாக முதல்–அமைச்சர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என்று கருதுகிறேன். மேலும் திரைப்பட துறையினரிடம் இது புது வரி அல்ல என்று அவர்களுக்கு தெளிவுப்படுத்தி உள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.