தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் வாபஸ்


தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 7 July 2017 11:04 PM IST (Updated: 7 July 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்தூர் பகுதியில் நடந்த தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மேட்டமலை, படந்தால், ஓ.மேட்டுப்பட்டி, நாகலாபுரம் உள்பட பல பகுதிகளில் 250–க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பகுதி எந்திரம் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 6 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடந்த 1–ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் தீப்பெட்டி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.

இதில் வரிவிதிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைதொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தீப்பெட்டி ஆலைகளின் போராட்டம் இன்று  வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வருகிற 10–ந்தேதி முதல் வழக்கம் போல் தீப்பெட்டி ஆலைகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Next Story