அன்னிய செலாவணி மோசடி புகார்: டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
அன்னிய செலாவணி மோசடி புகாரில் டி.டி.வி.தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் அமலாக்கப்பிரிவால் தொடரப்பட்டது. அதில் ஒரு வழக்கு, இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகும்.
இன்னொரு வழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஓட்டல் தொடங்குவதற்காக 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர், ஒரு லட்சம் பவுண்டு ஆகியவற்றை டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் மூலம் முறைகேடாக இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் முறைகேடாக டெபாசிட் செய்ததாகும்.
இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘என் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்போது எனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுசட்டவிரோதமானது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் டி.டி.வி.தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
Related Tags :
Next Story