வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும்
வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று நாடார் அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை
வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று நாடார் அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காமராஜரின் 115–வது பிறந்தநாளையொட்டி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.சென்னை புறநகர் நாடார் சங்க தலைவர் கொளத்தூர் த.ரவி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பா.ம.க. இளைஞரணி துணை தலைவர் மாம்பலம் வினோத் நாடார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் பேரன் காமராஜ் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில் காமராஜர் பற்றி பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–* தமிழக அரசின் நியமன பதவிகளில் நாடார் சமுதாயத்துக்கு உரிய பங்களிக்க வேண்டும். 10 வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும்.
* நாடார் சங்கங்களின் திருமண மண்டபம், சமூக நலக்கூடத்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
* பனைமரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குபவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது.
* காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க உத்தரவு பிறப்பித்துள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி, பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
* பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்.* வணிகர் நலன், பனைத்தொழில் காத்திட தனிவாரியம் அமைத்திட வேண்டும்.
* அரசியல் கட்சியினர் நாடார் சமுதாயத்துக்குரிய இடஒதுக்கீட்டை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.
* அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தினருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும்.
* தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேல்–சபை ஏற்படுத்த வேண்டும்.
* தென்னக நதிகளை இணைக்கும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடல்வழி பயண திட்டத்தை 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.
* தென்மாவட்டங்களில் பல்வேறு தொழில் பூங்காக்களை அமைத்திட வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.