உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது; வார்டுகளை வரையறை செய்ய புதிய ஆணையம்


உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது; வார்டுகளை வரையறை செய்ய புதிய ஆணையம்
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி வார்டுகளை வரையறை செய்ய புதிய ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக புதிய சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியுடன் முடிவடைந்தது.

பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். டிசம்பர் 31–ந்தேதி வரை இருந்த தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு 30–6–2017 வரை நீட்டிக்கப்பட்டது.

2–வது முறையாக, தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க சட்டசபையில் கடந்த மாதம் 24–ந்தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் 30–ந்தேதிக்கு அப்பால் 6 மாத காலத்திற்கு 31–12–2017 வரை நீட்டிப்பு செய்ய இந்த மசோதா வழி வகை செய்தது.

இதற்கிடையே, 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சி அமைப்பு வார்டுகளை வரையறை செய்வதற்கு எல்லை வரையறை ஆணையம் அமைப்பதற்கான புதிய மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்த சட்ட மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக தி.மு.க. சார்பில் உறுப்பினர் மதிவாணன் (கீழ்வேளூர்) தெரிவித்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா தாக்கல் காரணமாக உள்ளாட்சிதேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உருவாக்கியுள்ளது.


Next Story