மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு கோரி சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு கோரி சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 July 2017 8:02 PM GMT (Updated: 2017-07-11T01:32:57+05:30)

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு உள்ள 192 உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பிற்கான சேர்க்கையினை தமிழக அரசே நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ராமலிங்கம் கூறியதாவது:–

மருத்துவ படிப்பு முடித்தவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினால் அவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இடஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால் தமிழகத்தில் வருங்காலத்தில் உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவர்கள் இல்லாத நிலை வந்து விடும் அபாயம் உள்ளது.

ஆகவே உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் உள்ள அனைத்து இடங்களையும் தமிழக அரசே நிரப்ப வேண்டும். தமிழக அரசு டாக்டர்களுக்கு இருந்து வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை அப்படியே வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாங்கள் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மருத்துவர்களின் போராட்டம் தொடரும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story