ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கப்பரிசு


ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கப்பரிசு
x
தினத்தந்தி 11 July 2017 5:15 AM IST (Updated: 11 July 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதாக சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நேற்று இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கூறியதாவது:–

புதுக்கோட்டையை சேர்ந்த வீரர் லட்சுமணன் 2017–ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் கலந்துகொண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ் என்பவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார்.

லட்சுமணன் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், இவர்கள் பல்வேறு பன்னாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மேன்மேலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

2 தங்கப்பதக்கங்கள் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீரர் லட்சுமணனுக்கு ரூ.20 லட்சமும், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கியராஜிவுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.  இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 More update

Next Story