தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


தீர்ப்பு வரும் வரை மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2017 3:45 AM IST (Updated: 12 July 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

தீர்ப்பு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிறவகை பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவரான தர்னீஷ்குமார், சென்னையை சேர்ந்த சாய் சச்சின் உள்பட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘மருத்துவ படிப்பில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு கொள்கை முடிவு எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்து ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், ‘மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டுள்ள திருத்த விதிகளின்படி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என்ற அடிப்படையில் மட்டுமே இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியும். மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய அளவில் ஒரே நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் சூழ்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் என்று அரசாணை பிறப்பிப்பது சட்டவிரோதமானது. அதை ஏற்க முடியாது.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களை காப்பாற்றும் விதமாக அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, இதை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்கள்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, ‘தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 4.20 லட்சம் மாணவர்களில், வெறும் 84 ஆயிரம் பேர் மட்டுமே ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படித்த 4 ஆயிரத்து 600 மாணவர்களில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளனர். மாநில பாடத்திட்ட மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும், கிராமப்புறங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் இல்லை. பெரும்பாலான பள்ளிகள் நகரங்களில் தான் உள்ளது. அதுவும், ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட 50 சதவீத கேள்விகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. போன்ற பிறமொழி பாடத்திட்டங்களுக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை கருத முடியாது. இந்த ஏற்றத்தாழ்வை களையவே 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.ரவிச்சந்திரபாபு, ‘இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். தீர்ப்பு பிறப்பிக்கும் வரை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை தற்போதைய நிலையே தொடரவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

நீதிபதி தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைக்கு தீர்ப்பு பிறப்பிக்கும் வரை தடை ஏற்பட்டுள்ளது.

Next Story