தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சி எடுக்கவில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ்


தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சி எடுக்கவில்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 13 July 2017 12:30 AM IST (Updated: 13 July 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க அரசு முயற்சி எடுக்கவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் சிறிதும் முன்னேறவில்லை, அதற்காக முயற்சிக்கவும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

நிதி ஆயோக் வெளியிட்ட மற்ற புள்ளி விவரங்களில் கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல், கல்வி ஆகியவற்றில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தொழில்- வணிக வளர்ச்சிக்குத் தேவையான மனித வளமும், கட்டமைப்பும் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன என்பது தான் இதன் பொருளாகும். இத்தனை சாதகமான அம்சங்களுக்குப் பிறகும் தமிழ்நாடு தொழில் செய்ய ஏற்ற மாநிலமாகவும், முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாகவும் மாறவில்லை என்றால் அதற்கு முதன்மையான காரணம் அரசு நிர்வாகத்தில் காணப்படும் அளவுக்கு அதிகமான ஊழல் தான் என்பதைத் தவிர வேறு என்ன?.

ஊழல்

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு சலுகைகளை வழங்குவதற்காக அந்த நிறுவனங்கள் செய்ய இருக்கும் முதலீட்டின் மதிப்பில் 30 முதல் 40 சதவீதம் வரை கையூட்டு கேட்பதும், அதைக் கொடுக்க முடியாமல் தொழில் நிறுவனங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழக ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஊழலில் திளைத்து முற்றி, காய்ந்து விட்டனர். அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருந்த வைப்பதன் மூலம் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். அதற்கான நேரம் தமிழ்நாட்டிற்கு வெகுவிரைவிலேயே வரும் என்பது மட்டும் உறுதி.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 More update

Next Story