மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் வலியுறுத்தல்


மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்து: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவேண்டும் ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2017 2:30 AM IST (Updated: 15 July 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

திருமாவளவன்

ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி மனிதர் களை திருடர்களாக்குகிறது. ஜி.எஸ்.டி. வரி மிகப்பெரிய மோசடி. ஜி.எஸ். டி.யில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய, தங்களுடைய நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். இவ்வாறு விவா தித்த பின்னரே ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.ராமகிருஷ்ணன்

ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரியால் விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 509 பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்- டீசல் உள்ளிட்டவை ஜி.எஸ்.டி. வரியில் சேர்க் கப்படாதது ஏன்? என்று தெரியவில்லை.

தமிழகத்தை ஊழல்மயமாக்கிய அ.தி.மு.க. கட்சி, சிறைச்சாலையிலும் ஊழல் செய்திருக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மருத்துவபடிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது குறித்து ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் ஆகியோரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர்கள், “ஐகோர்ட்டு உத்தரவினை ஏற்கமுடியாது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்து, பிறப்பித்த அரசாணையை நிறைவேற்ற தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி, பிரதமரிடம் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதில் அளித்தனர். 

Next Story