மாநில செய்திகள்

தியாகதுருகத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை + "||" + Selling cows for Rs 2 crore a day

தியாகதுருகத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை

தியாகதுருகத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை
தியாகதுருகத்தில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
கடலூர்,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததைத்தொடர்ந்து, விவசாயிகள் தங்களது மாடுகளை விற்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதற்கிடையே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததால் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யும் தடை நீங்கியது. இந்த உத்தரவு விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், வேப்பூர், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

இங்கு கேரளா, தேனி, சேலம் உள்ளிட்ட வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடு-மாடுகளை வாங்கி செல்வார்கள். மத்திய அரசு உத்தரவினால் இதுவரை மாடுகள் விற்பனை மந்தமாகவே நடைபெற்றது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு எதிரொலியால் நேற்று நடந்த வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்தது.

அதாவது நேற்று 1,000-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கூடுதல் விலைக்கு வாங்கிச்சென்றனர்.

இதில் காளை மாடு ஜோடி குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

பசுமாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு வாரச்சந்தை களைகட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.