மாநில செய்திகள்

ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் மீண்டும் விசாரணை இன்றும் நடக்கிறது + "||" + Police re-investigate Rowdy Sridhar's son

ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் மீண்டும் விசாரணை இன்றும் நடக்கிறது

ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் மீண்டும் விசாரணை இன்றும் நடக்கிறது
ரவுடி ஸ்ரீதர் மகனிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள். இன்றும் விசாரணை நடக்கிறது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள எல்லப்பன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், வியாபாரிகளை மிரட்டி நிலங்களை குறைந்த விலைக்கு வாங்குதல் உள்பட பல்வேறு வழக்குகள் காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ளது. பலமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்.

தற்போது ஸ்ரீதர் வெளிநாட்டில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவரை கண்டுபிடித்து காஞ்சீபுரம் கொண்டுவரும் முயற்சியில் சர்வதேச போலீசை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி அணுகியுள்ளார்.

ஸ்ரீதரின் மனைவி குமாரி, வெளிநாட்டில் உள்ள ரவுடி ஸ்ரீதரை பார்த்துவிட்டு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வந்தபோது காஞ்சீபுரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீநாத் போலீசாருடன் விரைந்து சென்று ஸ்ரீதரின் மனைவியை பிடித்து விசாரணை நடத்தினார்.

மேலும் அமலாக்கப்பிரிவு போலீசார் ஸ்ரீதரின் பல கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி சீல் வைத்தனர். காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது.

இந்த நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 24) லண்டனில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கடந்த 9-ந்தேதி விமான நிலையத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை பிடித்து காஞ்சீபுரத்திற்கு அழைத்து வந்தார்.

காஞ்சீபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் தனிப்படை போலீசார் சந்தோஷ் குமாரிடம் ஸ்ரீதர் எந்த நாட்டில் இருக்கிறார் என்று துருவி துருவி விசாரித்தனர். மேலும் கடந்த 11-ந்தேதி விசாரணைக்காக ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் அப்போது காஞ்சீபுரம் போலீசில் ஆஜராகவில்லை.

இதனால் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு உத்தரவு வழங்க காஞ்சீபுரத்தில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த குற்றவியல் நீதிபதி வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கினார். இதையொட்டி பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன், ரவுடி ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் தான் லண்டனில் படித்து வருவதாகவும், அதனால் தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், இந்த வழக்கில் தனக்கு போலீசார் எந்தவித நெருக்கடியும் செய்யக்கூடாது என்றும் மனு செய்தார்.

அதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி விசாரணைக்காக நேற்றும், இன்றும் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையொட்டி சந்தோஷ்குமார் நேற்று காலை பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஆஜரானார். விசாரணை அதிகாரிகள் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சந்தோஷ்குமாரிடம் 4 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஸ்ரீதர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது போன்ற பல கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்றும் சந்தோஷ்குமார் பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஆஜராகிறார். இன்றும் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.