அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது


அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 18 July 2017 4:15 AM IST (Updated: 17 July 2017 10:17 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 315 இடங்களில் ஒருவர் மட்டுமே தேர்வானார்.

தமிழ்நாட்டில் 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், 3 மத்திய அரசின் கீழ் செயல்படும் என்ஜினீயரிங் கல்லூரிகள், 486 சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் என மொத்தம் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.ஆர்க். படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 988 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 6,225 இடங்களுக்கு 2,084 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு காலையில் நடைபெற்றது.  6,225 இடங்களில் 315 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த இடங்களுக்கு 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் அருண்குமார் என்பவர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியை தேர்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து தொழிற்கல்வியில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் நேற்று ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். இன்றும் அவர்களுக்கான கலந்தாய்வு தொடர்கிறது.

கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ–மாணவிகளின் பெயர் வருமாறு:–

பி.அஜித், எஸ்.சைலஸ்ரீ, டி.பாலாஜி, ஜெ.குருமூர்த்தி, கே.ஆகாஷ், எஸ்.ரம்யஸ்ரீ, டி.ரவிகுமார், எஸ்.பிரசாத் ஹரி, ஏ.முகமது சமீரா, டி.பிரியா.  இவர்களில் 8 பேர் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னூ, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, பேராசிரியை மல்லிகா ஆகியோர் இருந்தனர்.


Next Story