சென்னை மாநகராட்சிக்கு 8½ லட்சம் பேர் ரூ.141 கோடி சொத்து வரி செலுத்தவில்லை
சென்னை மாநகராட்சிக்கு 8½ லட்சம் பேர் ரூ.141 கோடி சொத்து வரி பாக்கி வைத்து உள்ளனர்.
சென்னை,
அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த தொகையை வசூலிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நிதி ஆண்டும் 2 அரையாண்டுகளாக (ஏப்ரல், அக்டோபர்) பிரிக்கப்பட்டு சொத்துவரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிகளை ஒவ்வொரு அரை நிதி ஆண்டின் முதல் 15 நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும் என்பது மாநகராட்சி சட்டம் ஆகும்.சொத்துவரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ‘வாரண்டு நோட்டீசு’ வழங்கியும், அதனைத்தொடர்ந்து ‘தண்டோரா’ அடித்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்பின்னரும் வரி செலுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் கட்டிடங்களை ‘சீல்’ வைத்து இறுதி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘ஜப்தி’ நடவடிக்கையையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டு (ஏப்ரல்–செப்டம்பர்) கடந்த ஏப்ரல் 1–ந் தேதி தொடங்கியது. சென்னை மாநகரில் சொத்து உரிமையாளர்கள் 12 லட்சத்து 3 ஆயிரத்து 887 பேர் உள்ளனர். இதில் 4–ல் ஒரு பங்கினரே வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் சொத்துவரி செலுத்துகின்றனர்.
இந்த அரையாண்டுக்கான சொத்துவரி நிலுவைத்தொகையாக ரூ.325 கோடி (நிதியாண்டின் மொத்த நிலுவைத்தொகை ரூ.650 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 3½ லட்சம் பேர் தங்களுக்குரிய சொத்து வரியை முறையாக செலுத்திவிட்டனர். பலர் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை மாநகராட்சிக்கு ரூ.184 கோடி சொத்துவரி வசூலாகி இருக்கிறது. இன்னும் ரூ.141 கோடி நிலுவைத்தொகையாகவே இருக்கிறது. எனவே நிலுவையில் உள்ள அத்தொகையை இந்த அரையாண்டு இறுதிக்குள் அதாவது வருகிற செப்டம்பர் 30–ந் தேதிக்குள் வசூலித்து விட வேண்டும் என்று மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.