பணியின் போது வீர மரணம் அடையும் தீயணைப்பு வீரர்களுக்கு கருணை தொகை ரூ.10 லட்சமாக உயர்வு


பணியின் போது வீர மரணம் அடையும் தீயணைப்பு வீரர்களுக்கு கருணை தொகை ரூ.10 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 19 July 2017 3:45 AM IST (Updated: 18 July 2017 9:28 PM IST)
t-max-icont-min-icon

பணியின் போது வீர மரணம் அடையும் தீயணைப்பு வீரர்களுக்கு கருணைத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

சென்னை,

கொடுங்கையூர் தீ விபத்து குறித்து சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

கொடுங்கையூர் தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஏகராஜ் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் உயிரிழந்தார். உயிரிழந்த ஏகராஜுக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முதல்–அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணை தொகை 10 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்திருந்த தீயணைப்பு வீரர் ராஜதுரை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உறவினர்களின் வேண்டுகோளின்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மானிய கோரிக்கையின்போது நான் அறிவித்த எதிர்பாரா மருத்துவ நல நிதி மூலம் இவர்களுக்கான மருத்துவ செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை, காவல்துறைக்கு இணையாக, பணியின்போது வீரமரணம் அடைவோருக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாகவும், நிரந்தர ஊனம் அடைவோருக்கு 1 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாகவும், கொடும் தீக்காயம் அடைவோருக்கு 20,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும், 20 விழுக்காட்டிற்கும் குறைவாக தீக்காயம் அடைவோருக்கு 20,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், இந்த நிதியாண்டிலிருந்து உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

16.7.2017 அன்று இரவு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தீக்காய சிகிச்சை பெற்று வரும் நபர்களை பார்வையிட வந்தபோது, அப்பிரிவில் பணியிலிருந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எதிர் கட்சித்தலைவருக்கு விளக்கம் அளித்தார்கள்.

எனவே தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story