பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர்களை திருத்த 24–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவ, மாணவிகளின் பெயர் முதல்முறையாக தமிழ்மொழியில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
சென்னை,
இதில் சிலரது பெயர்கள் தவறாக உள்ளதாக தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் காரணமாக, பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழ் பெயரில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாணவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 24–ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று, தமிழ் பெயரில் திருத்தம் கோரும் கோரிக்கை கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்.
திருத்தங்கள் கோரும் மாணவர்களிடம் இருந்து மேற்படி விண்ணப்பத்தை பெறவும், திருத்தங்களை இணையதளத்தின் வழியாக மேற்கொண்டு அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பவும், தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 31–ந்தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது ஏற்கனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.