மீனவர்கள் படகுகளில் சென்று பிடிக்கும் மீன்களை நடுக்கடலில் கப்பல் மூலம் பதப்படுத்தும் திட்டம்
மீனவர்கள் படகுகளில் சென்று பிடிக்கும் மீன்களை நடுக்கடலில் கப்பல் மூலம் பதப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
இதனால் மீனவர்களின் உழைப்பு வீணாவதுடன், அவர்களுடைய வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக நடுக்கடலில் கப்பல் மூலம் மீன்களை பதப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும் என்று 2011–ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இது ‘தாய் கப்பல்’ திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இதனை முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்த தேசிய மற்றும் சர்வதேச அளவிலான டெண்டர் 2 முறை விடப்பட்டது. ஆனால் டெண்டர் மீது யாரும் அக்கறை காட்டவில்லை. மீனவர்கள் மத்தியிலும், நடுக்கடலில் கப்பல் நிறுத்தப்பட்டால் படகுகள் மோதி சேதம் ஏற்படுமோ? என்ற அச்சமும் உள்ளது. இதன் காரணமாக தாய் கப்பல் திட்டத்தை செயல்படுத்துவது தள்ளிக்கொண்டே செல்கிறது.
மீனவர்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும்விதமாக தாய் கப்பல் திட்டத்தை 3 மாதம் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த தமிழக அரசின் மீன் வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–கடல்நீர் மற்றும் குளிரூட்டப்பட்ட மீன்கள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகளுடன் நடுக்கடலில் தாய் கப்பல் நிறுத்தப்படும். மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் இந்த கப்பலில் பெறப்படும். படகுகளில் மீன்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் கப்பலில் உள்ள கிரேன் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் கப்பல் மீது மோதி படகுகள் சேதமடைந்துவிடும் என்று மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
நடுக்கடலில் மீனவர்கள் பிடிக்கும் மீன்களின் குடல், ரத்தம் போன்ற தேவையற்ற பகுதிகள் அகற்றப்பட்டு, கப்பலில் உள்ள பதப்படுத்தும் பெட்டிகளில் வைக்கப்படும். இவ்வாறு வைப்பதன் மூலம் 6 மாதங்கள் வரை மீன்கள் கெட்டுப்போகாது. 50 டன் மீன்கள் ஏற்றப்பட்டவுடன் தாய் கப்பல் கரைக்கு திரும்பும். அப்போது மற்றொரு தாய் கப்பல் நடுக்கடலுக்கு வரவழைக்கப்படும்.
தாய் கப்பலில் மீனவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், படகுகளுக்கு தேவையான எரிபொருள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கி மீன்பிடிக்கலாம். கரைக்கு வந்து செல்லும் செலவும் பெருமளவில் குறையும். மீனவர்கள் வாழ்வாதாரம் உயரும்.சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அளித்துள்ளது. தற்போது ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஆழ்கடல் பகுதிகளில் தாய் கப்பல் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 3 மாதங்கள் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். மீனவர்களின் வரவேற்பை பொறுத்து 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும்.
தாய் கப்பல் திட்டம் தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.