ஐகோர்ட்டுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை?


ஐகோர்ட்டுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை?
x
தினத்தந்தி 19 July 2017 12:15 AM GMT (Updated: 2017-07-19T03:12:08+05:30)

உள்ளாட்சி தேர்தலை ஏன் இதுவரை நடத்தவில்லை? என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நீதிபதி எம்.துரைசாமி கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 24–ந் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும். இதுதொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

கடந்த மே 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துவிடுவோம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர், ஜூலை மாதத்துக்குள் நடத்துவதாக மற்றொரு உத்தரவாதத்தை வழங்கியது.ஆனால், இதுவரை தேர்தலை நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க காலகெடு நிர்ணயம் செய்து இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘தமிழக அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கிறது. மே 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என்று இந்த ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தான் உத்தரவாதம் அளித்தது. அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தேர்தலை நடத்தவில்லை. இந்த செயல், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது’ என்று வாதிட்டார்.

மேலும் அவர், ‘உள்ளாட்சி அமைப்புகள் என்பது சுயாட்சி அதிகாரம் கொண்டது. பல முக்கிய முடிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே எடுக்க முடியும். தற்போது உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தமிழக அரசு தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுகளை அரசு நியமித்துள்ள தனி அதிகாரிகளால் எடுக்க முடியாது. எனவே, தேர்தலை நடத்த ஒரு காலக்கெடுவை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேணடும்’ என்று கூறினார்.

அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தனி நீதிபதி என்.கிருபாகரன் தேர்தலில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் விதமாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியதுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால்தான், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும்’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘ஏற்கனவே மே 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என்று ஐகோர்ட்டுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது, ஏன் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் வக்கீல் நெடுஞ்செழியன் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதற்குள் இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story