சட்டசபை உரிமை மீறலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்


சட்டசபை உரிமை மீறலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்
x
தினத்தந்தி 20 July 2017 3:15 AM IST (Updated: 19 July 2017 8:54 PM IST)
t-max-icont-min-icon

குட்கா உள்ளிட்ட போதை பொருள் பிரச்சினையில் சட்டசபை உரிமை மீறலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் குட்கா பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை எடுத்துக்காட்டி பேசினார். அப்போது நடந்த விவாதத்தின் முடிவில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். வெளிநடப்பு குறித்து மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான் மசாலா, குட்கா போன்ற பொருட்கள் எல்லாம் தாராளமாக கிடைக்கின்றது.

இப்பிரச்சினை குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பியபோது, அதனை முழுமையாக பேச முடியாத நிலைக்கு ஆளானோம். இன்றைக்கு, சட்டமன்றத்தில் நிதித்துறை, அரசு ஊழியர்கள் என பொதுவான பிரச்சினைகளை பேச ஒதுக்கப்பட்டிருக்கின்ற நாள், அதனைப் பயன்படுத்தி சட்டமன்றத்தில் பல பிரச்சினைகளை எழுப்பியிருக்கின்றேன். நிறைவாக நான் பேசுகிற போது, சென்னையில் பல நாட்களாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் போதை பொருட்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாங்கள் எந்தெந்த கடைகளில் விற்கப்படுகிறது என ஆய்வு செய்தோம்.

அந்த அடிப்படையில் நேரு விளையாட்டரங்கம் அருகில் அமைந்திருக்கின்ற வேப்பேரி நெடுஞ்சாலை, அழகப்பா ரோடு உள்ளிட்ட இடங்களில் எல்லாம் குட்கா பவுடர் விற்கப்படுகிறதென ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது.

ஒரு பெண் போதை பொருட்கள் விற்கின்ற புகைப்படம் மட்டுமல்லாமல், சிறு சிறு குழந்தைகளே விற்கும் காட்சிகள் எல்லாம் இருக்கின்றது. இவ்வளவு ஆதாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு சட்டமன்றத்தில் பேச முயன்றபோது சபாநாயகர் எங்களுக்கு பேச அனுமதி மறுத்துவிட்டார். ஆகவே இதனை முழுமையாக எங்களால் பேச இயலவில்லை. சபாநாயகர் பேசுகிறபோது, எந்தவித ஆதாரமும் இல்லாமல் இதைக்கொண்டு வந்து நீங்கள் பேசுவது தவறு. ஆகவே உரிமை மீறல் பிரச்சினைக்கு அனுப்பிவைக்கிறோம் என்று சொல்கிறார்.

அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆதாரத்தை நாங்கள் தருகிற போது, இது எப்படி உங்களுக்கு கிடைத்தது என முதல்–அமைச்சர் கேட்கிறார். நான் சொன்னேன், காவல்துறை உயரதிகாரிகள், அமைச்சர் என ஆட்சியே லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த விற்பனைக்கு எல்லா விதமான வசதிகளையும் செய்துகொடுத்து துணை நிற்கிறது. ஆகவே எப்படி எங்களுக்கு கிடைக்காமல் இருக்கும்? அந்த அடிப்படையில் தான் நாங்கள் இன்றைக்கு பெற்று, அவையில் காட்ட வேண்டுமென கொண்டு வந்தோமே தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.

இது எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது? என கேட்டு நியாயமாக அவர்கள் மீது தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆகவே, ஆதாரங்களோடு பிரச்சினையை எடுத்து சொல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறோம். காவல்துறை அதிகாரிகளே லஞ்சம் பெற்றுக்கொண்டு, திருடர்களாக இருக்கின்ற போது நாங்கள் எப்படி காவல்நிலையத்தில் அதனை கொடுக்க முடியும்?.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story