தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் மாயம்


தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் மாயம்
x
தினத்தந்தி 21 July 2017 4:45 AM IST (Updated: 21 July 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் புகார்களை எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவித்த அறிவிப்பு, அமைச்சர்கள் மத்தியில் சுனாமியை உருவாக்கி விட்டது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என கமல்ஹாசன் சொல்ல, விவகாரம் வெடித்தது.

‘‘அவன் ஒரு ஆளே அல்ல’’ என்று உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏகவசனத்தில் பதில் கருத்து கூற பிரச்சினை பூதாகரமானது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது அறிக்கையில், ‘அமைச்சர் கேட்ட ஆதாரங்களையும், ஊழலால் அனுபவித்த இன்னல்களையும் உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள். இது டிஜிட்டல் யுகம் என்பதால் அதை பயன்படுத்துங்கள்’ என்று கூறியிருந்தார்.  அதோடு கமல்ஹாசன், நின்றுவிடாமல் அமைச்சர்களை எலக்ட்ரானிக் முறை மூலம் தொடர்பு கொள்ள கூடிய முகவரியையும் வெளியிட்டார்.

கமல்ஹாசன் வெளியிட்ட இணையதள முகவரி தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். அதில் சென்று தேடியபோது அமைச்சர்களின் தொடர்பு எண், இ–மெயில் முகவரி என எந்தவிபரமும் இல்லாமல் இருந்தன. அவர்களின் சொந்த ஊர், தொழில், சென்னை முகவரி, தொலைபேசி எண், வெளியூர் தொலைபேசி எண், இணையதள முகவரி என அனைத்து தொலை தொடர்பு அம்சங்களுக்கான இடம் வெற்றிடமாக இருந்தது.

இந்த இணையதளத்தை என்.ஐ.சி. பராமரிக்கிறது. இதுபற்றி என்.ஐ.சி. அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அந்த விவரங்களை அமைச்சர்கள் கொடுத்தால் மட்டும்தான் அதை பதிவேற்றம் செய்ய முடியும். அவை கிடைக்க பெறவில்லை என்பதால் அதை வெற்றிடமாக வைத்திருக்கிறோம்’’ என தெரிவித்தார்.

அரசு இணையதள பக்கத்தில் அவர்கள் வகிக்கும் துறை சம்பந்தப்பட்ட தகவல் மட்டுமே உள்ளது. துறை ரீதியாக அமைச்சர்களின் தனித்தனி விவர குறிப்புகளிலும் அவர்களின் முகவரி, இ–மெயில் விவரம், தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் இல்லை.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறும்போது, நேற்றுமுன்தினம் வரை பெரும்பாலான அமைச்சர்களின் இ–மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இடம் பெற்று இருந்தன. கமல்ஹாசனின் அறிவிப்புக்கு பிறகு இந்த விவரங்கள் மாயமாகிவிட்டன. ஆனால் முதல்–அமைச்சரின் இ–மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் மட்டும் காணப்பட்டது. ஆனால் நேற்று மாலையில் இருந்து முதல்–அமைச்சரின் இ–மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களும் மாயமாகிவிட்டது என்றார்.

ஆனால் தமிழகத்தின் 233 எம்.எல்.ஏ.க்களின் (அமைச்சர்கள் உள்பட) செல்போன் எண், புகைப்படம், தொகுதி, இ–மெயில் ஆகிய விவரங்கள், தமிழ்நாடு சட்டசபை இணையதளத்தில் இன்னும் இடம் பெற்றுள்ளது. http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html என்ற இணையதளத்தில் அவற்றின் விவரங்கள் உள்ளன.  முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தனிப்பிரிவு இ–மெயில் முகவரி மட்டும் அரசு இணையதளத்தில் காணப்படுகிறது.


Next Story