பொதுமக்களை திசைதிருப்புகிறார் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்


பொதுமக்களை திசைதிருப்புகிறார் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்
x
தினத்தந்தி 22 July 2017 5:00 AM IST (Updated: 22 July 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களை தமிழக அரசுக்கு எதிராக திசை திருப்புவதாக நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:-

‘தினத்தந்தி’யை வரிவிடாமல் படிப்பேன்

புத்தகம் மனிதனின் ஆயுளை மேம்படுத்தி, நல்வழிப்படுத்தி, சமுதாயத்தில் மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு கலை மிக மிக முக்கியமான ஒன்றாகும். சிறுவயதில் நான் மாணவ பருவத்தில் இருந்தபோது படித்த கார்ட்டூன் கதைகளான மாயாவி, சிந்துபாத் கதைகள் நினைவுக்கு வருகிறது. ராணி காமிக்ஸ் எப்போது வரும் என்று கடையில் காத்து இருப்பேன்.

அப்போது கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே கிராபிக்ஸ் படங்கள் ராணி காமிக்ஸ்சில் பிரமாதமாக வரைவார்கள். சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருப்பதால், நீங்கள் எல்லோரும் ஒரு பக்கத்தை படிக்க ஒரு நிமிடம் எடுத்துக்கொண்டால் நான் 10 வினாடிகளில் படித்து முடித்து விடுவேன்.

சிறுவயதில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை ஒரு வரி விடாமல் படித்து விடுவேன். என்னுடைய வாசிப்பு பழக்கத்துக்கும் அது ஒரு காரணமாக சொல்லலாம். தினமும் பத்திரிகையை சிறுவயது முதலே படிப்பதன் மூலமாக குழந்தைகள் தமிழை தங்கு தடையின்றி வாசிக்கும் நிலை, அறிவு மேம்படுகிற நிலை ஏற்படும். குழந்தைகளை சிறுவயது முதலே பத்திரிகைகளை படிக்க வைப்பதன் மூலம் உலகை உணர்ந்தவர்களாக, சமுதாயத்தை உணர்ந்தவர்களாக குழந்தைகளை உருவாக்குவது பெற்றோரின் லட்சியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கமல்ஹாசனை கண்டு அஞ்சுகிறதா?

பதில்: தமிழக அரசுக்கு ஒரு அச்சமும் இல்லை. இது அம்மாவின் ஆட்சி. எனவே அது குறித்து யாரும் அச்சப்பட தேவையும் இல்லை. 234 எம்.எல்.ஏ.க்களுக்கான இ-மெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அது நீக்கப்பட்டுள்ளது என்பது தவறானது. சட்டமன்ற உறுப்பினர் தான் அமைச்சராக முடியும் என்ற நிலையில் அந்த கேள்விக்கே இடம் இல்லை.

கேள்வி: கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிறகுதான் இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஏற்கனவே தெளிவாக கூறியது போன்று அம்மாவின் அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படுகின்ற உள்நோக்கமான செயலுக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த துறையில், இந்த ஊழல் நடைபெற்று இருக்கிறது என்றால், அதற்கு பதில் கூற அரசு இருக்கிறது. நமது ஜனநாயக அமைப்பில் சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை, பத்திரிகை துறை இந்த நான்கும் ஜனநாயகத்தின் தூண்கள்.

எனவே அரசு ஏதாவது முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கருதினால், அதனை அரசிடம் ஆணித்தரமாக தெரிவித்து அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரலாம். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி அது நிராகரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை நாடலாம். இது தான் முறை.

அதைவிட்டு, நான் இணையதளத்தில் தெரிவித்துவிட்டேன். இ-மெயிலில் தெரிவித்து விட்டேன் என்று கூறுவது குழந்தை தனமானது. இது போகாத ஊருக்கு வழி கேட்பது. போற ஊருக்கு வழி வேண்டுமானால், இந்த துறையில் இந்த மாதிரியான முறைகேடு இருக்கிறது. எங்களிடம் இருந்த ஆதாரத்தை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத்துக்கு போகிறோம் என்று போனால், நாங்கள் நீதிமன்றத்தில் அந்த தவறு செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும். அதைவிடுத்து, அவரது ரசிகர்களை, பொதுமக்களை அரசுக்கு எதிராக திசைதிருப்பும் ஒரு செயலாகவே நான் இதை கருதுகிறேன்.

கேள்வி: தமிழக அரசு மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு தொடரப்படுமா?

பதில்: ஒரு குற்றச்சாட்டை சுமத்த முற்படும்போது, அந்த குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இல்லாத பட்சத்தில் வேண்டும் என்றே அவதூறு பரப்ப முயற்சித்தால், யாராக இருந்தாலும், கமலாக இருந்தாலும் சட்டத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். அவதூறு வழக்கை சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

கேள்வி: டெங்கு காய்ச்சலை தடுக்க முடியாவிட்டால் பொறுப்பில் இருந்து ஒதுங்கி கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?

பதில்: தமிழக அரசு சுகாதார மாநிலமாக திகழ்கிறது. வட மாநிலத்தவரும் வந்து சிகிச்சை பெறும் ஒரு மாநிலம் தமிழ்நாட்டின் சென்னை மாநகரம். நிதி நிலையில் ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி அந்த துறைக்கு நிதி ஒதுக்கி இருக்கிறது என்றால் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், சில பருவகால மாற்றங்களில் இது போன்ற டெங்கு காய்ச்சல் எல்லாம் வரும் போது ஒரு அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் மகள் சுருதிஹாசனை வைத்தே டெங்கு குறித்த விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படியே டெங்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் பயப்பட தேவையில்லை. அவர்களுக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவாக ‘பிளேட்லட்’ குறைந்தால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று எல்லா விதமான மேல்சிகிச்சைகளும் நல்ல தரமான முறையில் பெற்றுக்கொள்ளலாம் என்கிற வகையிலே வேண்டிய அளவு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story