ஏர்வாடியில் போலி அடையாள அட்டைகளுடன் பாகிஸ்தான் முதியவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு


ஏர்வாடியில் போலி அடையாள அட்டைகளுடன் பாகிஸ்தான் முதியவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 July 2017 7:39 AM GMT (Updated: 2017-07-23T13:09:36+05:30)

போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பாகிஸ்தான் முதியவர் கைது செய்யப்பட்டது ஏர்வாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இங்குள்ள தனியார் விடுதியில் சந்கேத்திற்கிடமாக முதியவர் ஒருவர் தங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், முதியவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இலங்கை உல்பெண்டால் பகுதியில் இருந்து வருவதாகவும், தனது பெயர் காசிம்பாய் என்றும் தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் முதியவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அங்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது. அவர் மும்பை,  ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்த ஆதாரங்களும் சிக்கின.

மேலும் பீகார் மற்றும் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஆதார் கார்டு நகலில் தனது புகைப்படத்தை மட்டும் ஓட்டி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால் அந்த முதியவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து கியூபிரிவு போலீசார் வரவழைக்கப் பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. முதியவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்த அலி முகம்மது மகன் முகம்மது யூனுஸ் (வயது 67) என்பது உறுதியானது.

அவர் போதை பொருட்கள் கடத்துவதற்காக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் இலங்கை சென்ற முகம்மது யூனுஸ் அங்கு போதை பொருள் கடத்தல்காரர்களை சந்தித்துள்ளார். அவர்கள் கூறியபடி அங்கிருந்து கள்ள தோணி மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளார். பின்னர் அகமதாபாத்தில் குறிப்பிட்ட போதை பொருட்கள் கடத்தல் நபரை சந்தித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக முகம்மது யூனுஸ் கள்ளத் தோணி மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டு அதற்காக ஏர்வாடிக்கு வந்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கடற்காற்று அதிகமாக இருந்ததால் இலங்கைக்கு செல்ல முடியவில்லை என்றும் கடல் இயல்பான நிலைக்கு வந்த பிறகு இலங்கை செல்லவும் முகம்மது யூனுஸ் திட்டமிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகம்மது யூனுசிடம் போதை பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி ராமேசுவரம் வர உள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story