சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் மத்திய நிதி மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் மத்திய நிதி மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2017 5:00 AM IST (Updated: 31 July 2017 10:52 PM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிலிருந்து எந்த வரி விலக்கையும், வரிக் குறைப்பையும் பெற்றுத்தர முடியாத கையாலாகாத நிதி அமைச்சராக ஜெயக்குமார் இருந்து வருகிறார்.

மாநிலத்தின் உரிமைகள், மாநிலத்தின் அதிகாரம் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையிலும் நிதி அமைச்சருக்கும் சரி, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சரி நிமிர்ந்து நின்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் தைரியம் துளியும் இல்லை.

தங்கள் தலைக்கு மேல் தொங்கும் ‘ஊழல் கத்திகளில்’ இருந்து தப்பிக்க, தமிழக மக்களின் நலன்களை, மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக அடகு வைத்து, ஆட்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்–அமைச்சரின் தொகுதி இருக்கும் சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, ஜவுளித் தொழிலாளர்கள், சிறு – குறு தொழில் செய்வோர் எல்லாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதுபற்றி காது கொடுத்துக்கூட முதல்–அமைச்சர் கேட்கவில்லை. ஜி.எஸ்.டி. வரியால் திருப்பூர் மாவட்டத்தின் பின்னலாடை தொழில் உள்பட தொழில்துறையே முடங்கிக் கிடக்கிறது. ஆனால் சுயநலனுக்காக முதல்–அமைச்சருக்கு இணையாக பிரதமரைச் சென்று சந்திக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திருப்பூரின் தொழில்துறை குறித்து கவலைப்படவில்லை.

மத்திய நிதி அமைச்சரே தமிழகத்திற்கு வந்திருந்த நிலையில், அவரிடம் ஜி.எஸ்.டி.யால் தொழில் நகரம் பாதிக்கப்படுகிறது என்று நேரில் முறையிட்டு நிவாரணம் பெற மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு அருகதை இல்லை.

எந்தத்தரப்பு மக்களுக்கும் பயனளிக்காத ஒரு குதிரை பேர அரசு தமிழகத்தில் நடப்பதால், தமிழக மக்களின் நலன்கள் பறிபோகின்றன. கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி, என்ற போர்வையில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மாநில அரசின் வரி அதிகாரத்தையும், மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக பிடுங்கிக் கொண்டிருக்கிறது.

சரணாகதி படலத்தில் இருந்து மீண்டு, குறைந்தபட்சம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்குமான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குதிரை பேர அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறி, கைத்தறி, ஜவுளித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் விதத்தில் உடனடியாக ஜி.எஸ்.டி. கவுன்சிலை கூட்டி வரியை குறைத்து, சிறு மற்றும் குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story