நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்


நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

பணிநாட்கள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடலூர்,

பணிநாட்கள் குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மினிவேனின் கண்ணாடியை அவர்கள் உடைத்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், என்.எல்.சி. சுரங்கம் 1ஏ-வில் மின்னியல் மற்றும் எஸ்.எம்.டி. பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதத்தில் 19 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படும் என்று என்.எல்.சி. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 20-வது நாளாக வடலூர் நான்கு முனை சந்திப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சேர்ந்து தி.மு.க., பா.ம.க., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி தாசில்தார் ஜான்சிராணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இதனால் விருத்தாசலம்-கடலூர், கும்பகோணம்-சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை விலக்கி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடக்கும்போது எப்படி வாகனங்களை செல்லவிடலாம் என்று கூறி அந்த வழியாக சென்ற ஒரு மினிவேனை தடுத்து நிறுத்தி தாக்கினர். இதில் மினிவேனின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story