தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:00 AM IST (Updated: 1 Aug 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சியும், கடுமையான குடிநீர் பிரச்சினையும் நிலவுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையாவது ஓரளவுக்கு பெய்யாதா? என்று தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு 2–வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.

இந்தநிலையில் ஆந்திர கடலோரம் முதல் குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதன்காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:–

ஆந்திர மாநிலம் கடலோர பகுதி முதல் கன்னியாகுமரி கடல் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி ஊடாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. மேலும் மேற்கு நோக்கி வீசும் காற்று வலுப்பெற்றுள்ளது. வெப்பச்சலனமும் உள்ளது. இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதுபோல மழை இன்னும் 4 நாட்களுக்கு இருக்கும். எந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறமுடியாது.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–

செங்கம் 10 செ.மீ., நீடாமங்கலம், போளூர், காங்கேயம், வாணியம்பாடி தலா 8 செ.மீ., மன்னார்குடி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், அரிமளம், பேராவூரணி, சேலம் தலா 7 செ.மீ., ஓமலூர், ஆத்தூர், ஆலங்காயம் தலா 6 செ.மீ., சாத்தனூர் அணைக்கட்டு, சமயபுரம், ராயகோட்டை, ஒகேனக்கல், செஞ்சி, பெனுகொண்டாபுரம், மேலூர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், கரம்பக்குடி, சங்கராபுரம், உசிலம்பட்டி, பாளையங்கோட்டை, கோவில்பட்டி தலா 5 செ.மீ., கிராண்ட் அணைக்கட்டு, திண்டுக்கல், கடவூர், வால்பாறை, சின்னக்கல்லாறு, பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, திருமங்கலம், அரூர், வல்லம், துவாக்குடி தலா 4 செ.மீ. மழையும் மற்றும் 75–க்கும் மேற்பட்ட இடங்களில் ஓரளவு மழையும் பதிவாகி உள்ளது.

Next Story